தேன்கனிக்கோட்டை : அஞ்செட்டி அருகே அத்திமரத்தூர் கிராமத்தில், நான்கு நாட்டு மாடுகள் நுரை தள்ளியநிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நாட்றாம்பாளையம் பஞ்சாயத்து, அத்திமரத்தூர் கிராமத்தில், உழவு பணி மற்றும் பால் உற்பத்திக்கு நாட்டு மாடுகள் வளர்த்து வருகின்றனர். அருகில் தாங்கள் வளர்க்கும் நாட்டு மாடுகளை உள்ள வயல்களில் மேயவிடுவது வழக்கம்.
அத்திமரத்தூர் கிராமத்தில் வசிக்கும் சிவன்(50), தான் வளர்த்து வரும் நாட்டு மாடுகளை, நேற்று காலை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள வயல்பகுதியில் விட்டிருந்தார். மேய்ச்சலுக்கு சென்ற சிறிது நேரத்தில், ஒகேனக்கல் செல்லும் நெடுஞ்சாலையோரம் வயலில் வாயில் நுரை தள்ளிய நிலையில், மர்மமான முறையில் 4 மாடுகளும் இறந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவன் அளித்த புகாரின் பேரில், அஞ்செட்டி போலீசார் மாடுகள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.