சேலம்: சேலத்தில் இன்று காலை 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரமாண்ட விழாவில், ரூ.1,649 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சிக்கும், சேலத்தில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சேலம் வந்தார். ஈரோடு பவானியில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லை யான பெரும்பள்ளம் பகுதியில் இருந்து மேட்டூர் வரை 11 கி.மீ. தூரத்திற்கு பொதுமக்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இந்த ரோடுஷோவில், சாலையில் இறங்கி நடந்து வந்த முதல்வரை பார்த்து மக்கள் உற்சாகமடைந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இந்த அணை திறப்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். வரும் வழியில் பொதுமக்களும், திமுகவினரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓமலூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டருக்கு ரோடு ஷோ நடத்தினார். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பால்வளத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.200.26 கோடி மதிப்பீட்டில் 225 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய நூலகக்கட்டிடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1,244.28 கோடி மதிப்பீட்டில் 509 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனைப்பட்டா, நகர நிலவரி பட்டா, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,01,203 பயனாளிகளுக்கு ரூ.204.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். மொத்தமாக ரூ.1,649.18 கோடியில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இவ்விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ராஜேந்திரன், மதிவேந்தன் மற்றும் கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம்.செல்வகணபதி எம்பி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.