சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த காணொலி காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு தான், கிராம சபை கூட்டங்களை முறையாக, தடங்கல் இல்லாமல் நடத்தி கொண்டு வருகிறோம். கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்தச் சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோல கிராம சபைக் கூட்டங்களை தடையில்லாமல் நடத்துகிறோம்.
மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள் தான். உத்திரமேரூர் வட்டாரம் தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு இதை சொல்கிறது. யாரெல்லாம் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்களோ அவர்கள் எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதிக் குடத்தில் போடுவார்கள்.அந்தக் குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட பெயரில் யாருடைய பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை.
இப்படித் தான் தமிழ்நாட்டில் மக்களாட்சி என்ற அமைப்பே மலர்ந்தது. அந்த வகையில் பார்த்தால், கிராமங்களில் தான் மக்களாட்சி முறையானது முதலில் தோன்றியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, ‘கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருகிறது. கிராம சபைகள் கூட்டங்கள் குறைந்தது ஆண்டுக்கு நான்கு முறை நடக்க ேவண்டும் என்று கலைஞர் மாற்றி அமைத்தார். தற்போதைய திராவிட மாடல் அரசானது, இதை ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று அதிகரித்திருக்கிறோம்.
ஒரு அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினைக் கண்காணித்தல், ஊராட்சிகளின் வரவு, செலவினங்களை ஆய்வு செய்தல், பயனாளிகளைத் தேர்வு செய்தல், திட்டக் கண்காணிப்பு செய்தல் ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
கிராம சபையில், ஊராட்சிகளுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே விவாதிக்க வேண்டும். ஊராட்சியினுடைய எல்லாப் பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கே கூடியிருக்கக்கூடிய அலுவலர்களிடத்தில், அவர்கள் துறை மூலமாக மேற்கொள்ளப்படுகிற திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் கலந்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராம சபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும்.
நீர் ஆதாரங்களை வளப்படுத்துதல், தண்ணீரின் முக்கியத்துவம், நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட, திரவக் கழிவு மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை நிலை நிறுத்துகிற வகையில், எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்துத் துறையும் வளர வேண்டும், அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகிறோம். நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது, கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும். “ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக, தொழில் வளர்ச்சியாக மட்டும் இருக்கக் கூடாது. சமுதாய வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று நான் அடிக்கடி சொல்லி கொண்டு வருகிறேன். அதை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்றால், கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாக வேண்டும். இதை மனதில் வைத்து தான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி கொண்டு வருகிறோம்.
அக்டோபர் 2, அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள். “இந்தியா- கிராமங்களில் வாழ்கிறது” என்று சொல்லி, ‘கிராம சுயராஜ்ஜியம்’ எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடைய வேண்டும் என்று விரும்பினார். தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும் என்றார். கிராம சபை கூட்டத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.