சென்னை: வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் 2024-ல் மகளிர் ஒற்றையர் எஸ்யு5 பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசின் ELITE திட்டம் & தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் பயன்பெற்று வரும் இவ்விரு வீராங்கனையருக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான போதே தலா ரூ.7 லட்சத்தை சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினோம். இன்றைக்கு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமைத் தேடித்தந்துள்ள இருவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம். நம் வீராங்கனையரின் சாதனைப் பயணம் தொடர நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.