Sunday, June 23, 2024
Home » கவர்மென்ட் வேலையும் போச்சு டெபாசிட்டும் போச்சு என புலம்பும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கவர்மென்ட் வேலையும் போச்சு டெபாசிட்டும் போச்சு என புலம்பும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘கஞ்சாவை பிடி, குட்காவை பிடிக்காதே என புது ஐடியா கடைப்பிடிக்குதாமே புதுவை காக்கி..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக பெட்டிக்கடைகளில் கிடைக்கின்றன. பூஸ்ட் இருக்கா என்று கேட்டால், கடையின் உள்ளே தனியாக ஒரு இடத்தில் இருந்து எடுத்துக் கொடுப்பார்கள். அதே நேரத்தில் கஞ்சா அதிகரித்துவிட்டது, கஞ்சா தான் முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என்ற மாயத் தோற்றத்தை புதுச்சேரியில் செயற்கையாக காவல் துறை அதிகாரிகளே உருவாக்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிலோ கணக்கில் தினமும் புகையிலை பொருட்கள் கடைகளில் விற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இது நன்றாக தெரிந்தும், எந்த லோக்கல் காவல்துறையும் பிடிப்பதில்லை. லோக்கல் போலீசார் புகையிலை பொருட்களை பிடிக்க கூடாது என்று மறைமுக உத்தரவாம். கஞ்சாவை வேண்டுமானால் பிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களாம். கடந்த காலங்களில் சிறப்பு அதிரடிப்படை குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பொறி வைத்து மூட்டை, மூட்டையாக பிடித்து வந்தனர். ஆனால் தற்போது அந்த பிரிவே இல்லை. மேலும் ஆன்டி நார்க்கோட்டிக் ஸ்குவாட் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு கஞ்சாவை மட்டும் தற்போது பிடித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, எஸ்பி ரேங்க்கில் உள்ள அதிகாரி முதல் சீனியர் எஸ்பி வரை குட்கா விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதாம். இது குறித்து விரிவான அறிக்கை துணை நிலை ஆளுநருக்கு சென்றுள்ளதாம், காவல்துறை அதிகாரிகள் மாற்றம் விரைவில் இருக்கும் என்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கவர்மென்ட் வேலையும் போச்சு, டெபாசிட்டும் போச்சு என புலம்புவது யார்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நடந்து முடிஞ்ச நாடாளுமன்ற எலக்‌ஷன்ல வெயிலூர்ல போட்டி போட இலைகட்சியில ஆளே இல்லை. வேட்பாளரே கிடைக்காத நிலையில், ஒரு கவர்மென்ட் டாக்டரு தன்னோட வேலைய ராஜினாமா செஞ்சிட்டு வேட்பாளராக நின்னாரு. வந்தவரு, என்ன நினைச்சி வந்தாரோ, டெபாசிட் கூட வாங்கவில்லை. கட்சிக்காரங்களும் ஒத்துழைப்பு இல்லையாம். எலக்‌ஷன்ல படுதோல்விய சந்திச்சாரு. எலக்‌ஷன் முடிவு வந்ததுல இருந்து ஆளே இல்லையாம். டாக்டர் வேலையும் போச்சு, டெபாசிட்டும் போச்சுன்னு புலம்பித் தீக்குறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலக்கத்துல இருக்காங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தென்மாவட்டங்கள் உள்பட 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இது அக்கட்சியின் தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத சம்பந்தமா ஒவ்வொரு மாவட்டத்திலயும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரிச்சிக்கிட்டு வர்றாராம். ஆனால் தனது சொந்த மாவட்டமான மாங்கனி மாவட்டத்துலயும் ஓட்டு குறைஞ்சிபோனதை அவரால் ஜீரணிக்க முடியலயாம். சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு ஆகிய 3 எம்எல்ஏ தொகுதியில இலைக்கட்சி குறைந்த அளவுலதான் வாக்குகளை பெற்றுள்ளதாம். இது பற்றி சிட்டி கட்சி நிர்வாகிகளிடம் இலைக்கட்சி தலைவர் விசாரித்தாராம். விசாரணையில சிட்டி நிர்வாகிகள் பலர் சரிவர வேலை செய்யாமலும், விட்டமின் ப வை சரியாக கொடுக்காம இருந்ததும் தெரியவந்ததாம். இதனால கடுப்பான தலைவர் சரியா வேலை செய்யாத பணத்தை பதுக்கிக்கொண்ட நிர்வாகிகளை மாற்ற முடிவு செஞ்சிட்டாராம். குறிப்பிட்ட தொகுதியில எந்தெந்த இடத்தில வாக்குகள் குறைவாக கிடைச்சிருக்குன்னு லிஸ்ட் எடுத்து அதை வைச்சி அப்பகுதி நிர்வாகிகள தூக்கப்போறாராம். இதனால மாங்கனி சிட்டி இலைக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்காங்களாம். அடுத்ததா அடுத்தடுத்த தொகுதிகள்ல நடவடிக்கை பாயுமாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொந்தக் கட்சி வேட்பாளரையே தோற்கடித்த 2 மாஜிக்களை பற்றி தான் இப்போ பரபரப்பான பேச்சா இருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..தூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்ட இலைக்கட்சி வேட்பாளரை தோற்கடிக்க, 2 மாஜிக்கள் திட்டமிட்டு செயல்பட்டதாக அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இங்கு தாமரைக்கட்சி 2ம் இடம் பிடித்ததால், இலைக்கட்சியில் நிறுத்தப்பட்ட டாக்டரானவர், மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி தந்திருக்கிறது. இதற்கு இலைக்கட்சியின் மாஜிக்கள் இருவருடன், செல்லமானவரும் காரணமென கட்சியினரே தெரிவிக்கின்றனர். தூங்காநகரில் மாஜிக்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். செல்லமானவர் தன் பங்குக்கு ஆதரவாளர்களுடன் தனியாக இருந்து வருகிறார். இவர்களுக்குள் எப்போதுமே செட் ஆகாது. இதனால் தூங்காநகரில் இலைக்கட்சி மூன்று கோஷ்டிகளாகவே பிரிந்து கிடக்கிறது. இதில், டாக்டரானவர் இலைக்கட்சியில் இணைந்ததில், மூவருக்கும் விருப்பமில்லையாம். நான்காவது அணி பார்ம் ஆகக்கூடாது என்பதில் மூவருமே உஷாராக இருந்திருக்கின்றனர். மூவரும் தேர்தலில் தங்கள் வாரிசுகளை களமிறக்குவதில் முனைப்பு காட்டி முடியாமல் போனதை காரணமென்கின்றனர். லோக்கல் மாஜி பிரசாரத்தின்போது, ‘கூட்டத்தை விட்டு போனா ரத்தம் கக்கி சாவீங்க’ என பேசியது, பலத்த சர்ச்சையை கிளப்பியது. பிரசாரத்திற்கும் பலவீனமாக அமைந்ததாம். இதைப்போல செல்லமானவர் தன் வாரிசு கடந்த தேர்தலில் நின்றபோது காட்டிய வேகத்தை, டாக்டரானவருக்கு காட்டாமல் ஒரு சட்டசபை தொகுதி பகுதியில் மட்டும் பெயரளவில் தலையை காட்டி விட்டு கழன்று கொண்டார். புறநகர் மாஜியும் வேறொரு தொகுதிக்கு பொறுப்பாளர் என்ற போர்வையில் இங்கே தலைகாட்டாமலேயே இருந்து விட்டாராம்… பொருளாதாரம் மட்டுமின்றி ஆட்கள் பலம் துவங்கி அத்தனையிலும் ஒத்துழைக்காததே டாக்டரானவரின் ஓட்டுகள் சரிந்து, மூன்றாமிடத்திற்கு போயிருக்கிறதாம். சொந்த கட்சி வேட்பாளரையே தோற்கடித்திருக்கிறார்களே என டாக்டரின் ஆதரவாளர்கள் பார்க்கும் எல்லோரிடமும் புலம்பித்தவித்து வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

eleven − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi