சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞர் முதல்வராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பல்வேறு வரலாற்று திட்டங்களை அறிவித்து செயலாக்கம் செய்தார். இந்நிலையில், முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து செயலாக்கம் செய்து மாற்றுத்திறனாளிகளின் இதயங்களில் குடிகொண்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகையான மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பதவி உயர்வு பெற தடையாக உள்ள, டிஎன்பிஎஸ்சி துறை தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். அத்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கைகளை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு துறையில் பணியாற்றும் கை, கால் அங்க குறைபாடு மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, அறிவுசார் குறைபாடு மற்றும் புற உலக சிந்தனையற்ற அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்வு பெற தடையாக உள்ள டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளார். இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், கீதாஜீவனுக்கும், சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜாவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.