Thursday, April 18, 2024
Home » அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்ததாக அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாஜி பெண் அமைச்சர் மீண்டும் சேர்ப்பு: சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக கெஞ்சி சேர்த்த எடப்பாடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்ததாக அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாஜி பெண் அமைச்சர் மீண்டும் சேர்ப்பு: சிறுபான்மையினர் ஓட்டுகளுக்காக கெஞ்சி சேர்த்த எடப்பாடி

by Karthik Yash

வேலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.6 கோடி மோசடி புகாரில் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாஜி பெண் அமைச்சர் மீண்டும் சேர்க்கப்பட்டார். சிறுபான்மை ஓட்டுகளுக்காக எடப்பாடி கெஞ்சி சேர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் நிலோபர் கபில் அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரது உதவியாளர் பிரகாசம் மூலம் பலரிடம் ரூ.6 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக காவல் நிலையங்களிலும், எஸ்பி அலுவலகத்திலும் பலர் புகார் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் நிலோபர் கபிலின் உதவியாளர் பிரகாசம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை வழங்கினார். அதில், ‘நிலோபர் கபில் அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வசூலித்து வேலை வாங்கி தராததால், பணம் இழந்தவர்கள் என்னை தொல்லை செய்கின்றனர்’ என தெரிவித்திருந்தார்.

அடுத்த சில நாட்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் முன்னாள் பெண் அமைச்சர் நிலோபர் கபிலை அதிமுகவில் இருந்து நீக்கினர். அப்போது நிலோபர் கபில் அதிமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்பு, திருப்பத்தூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலில் சீட் கொடுக்காததோடு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்ற நிலோபர் கபில், கே.சி.வீரமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோடி செய்ததாக நிலோபர் கபில் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலரும் மனு அளித்து வந்தனர்.

பாஜ கூட்டணியில் இருந்ததால் அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை என்று எடப்பாடி உட்பட மாஜி அமைச்சர்கள் வெளிப்படையாக கூறினர். இந்நிலையில் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக சிறுபான்மையினர் ஓட்டை வாங்க எஸ்டிபிஐயுடன் கூட்டணி வைத்தது. தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலோபர் கபிலை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி முடிவு செய்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி நிலோபர் கபிலும் பலமுறை சேலத்துக்கு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினாராம். அப்போது கட்சியில் மீண்டும் இணையும்படி எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். ஆனால் அதிருப்தியில் இருந்த நிலோபர் கபில் ஆரம்பத்தில் மறுத்ததாகவும், எடப்பாடி பழனிசாமி கெஞ்சி கேட்டதால் கட்சியில் இணைய ஒப்புக்கொண்டதாகவும் அதிமுகவினரிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாஜி அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி முன்னிலையில் நிலோபர் கபில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘அரசு வேலை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சிறுபான்மையினரின் ஓட்டுகளும் இந்த முறை நிலோபர் கபிலால் அதிமுகவுக்கு கிடைக்காது. நிலோபர் கபில் சேர்ந்ததால் அதிமுகவில் ஏற்கனவே இருக்கும் கொஞ்சம் சிறுபான்மை ஓட்டுகளும் பாதிக்கப்படும்’ என தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

eighteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi