திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைத்ததாக அவரது தாயான பள்ளி தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டார். திருச்சி மேலப்புதூரில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. விடுதியில் வெளியூர் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிரேஸ் சகாய ராணி(53)உள்ளார். இவரது மகன் சாம்சன் டேனியல் (31), திருச்சி மாவட்டம், லால்குடி சிறுமயங்கொடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தாய், பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருப்பதால், அவ்வப்போது, சாம்சன் டேனியல், பள்ளி விடுதிக்கு சென்று வருவதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள், தலைமை ஆசிரியையின் மகன் என்பதால், வெளியே சொல்வதற்கு தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. அவரது அத்துமீறல் அதிகரிக்கவே, பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர் மற்றும் வார்டன் ஆகியோரிடம் தெரிவித்தனர்.புகாரின்படி பாலக்கரை போலீசார் அந்த விடுதிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாம்சன் டேனியல் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் அளித்த புகாரின்பேரில், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, சாம்சன் டேனியலை (31) நேற்று கைது செய்தனர். குற்றத்தை மறைத்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியை கிரேஸ் சகாய ராணியையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். சாம்சன் டேனியில் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என விசாரணை நடக்கிறது.