கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, இன்று காலை பள்ளி நுழைவுவாயலில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர், துராபள்ளத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கிருந்த, முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவர், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஏற்கெனவே பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை ஆசிரியர் விருப்ப ஓய்வுபெற்று சென்றுவிட்டார். தற்போது, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக செந்தில்வளவன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் அப்பகுதி மக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் பாராட்டு தெரிவித்து, மதிப்புடன் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 2 மாதங்கள் மட்டுமே இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய செந்தில்வளவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி, வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வளவனை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி, நேற்று காலை அப்பள்ளியின் நுழைவுவாயிலை 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எங்களுக்கு தலைமை ஆசிரியர் செந்தில்வளவன்தான் இருக்க வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ-மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைத்து மாணவ-மாணவிகளையும் பள்ளிக்குள் போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.