சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. ஏழை, எளிய மக்கள் அதிகம் நாடி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது நடமாடும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவ குழுவை அனுப்பி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அதேபோல, டெங்கு காய்ச்சல் வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், குழிகளில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் உபயோகமற்று டயர்கள், மூடப்படாத நீர்தேக்க தொட்டிகள் போன்ற பொருட்களில் தேங்கியுள்ள தண்ணீரில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன. இந்த ஏடிஎஸ் கொசுகள் எளிதாக அனைத்து இடங்களுக்கும் பரவக்கூடியது. அந்தவகையில், தமிழக மருத்துவ குழு தொடர் கண்காணிப்பில் இருந்து டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். மக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.