கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆமைக்குளம், கோழிப்பாலம் என இரு பகுதியில் வகுப்புகள் இயங்கி வருகிறது. இதில் கோழிப்பாலம் வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டிடங்களில் கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டில், பாய், தலையணை, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்னும் அகற்றப்படாமல் குவிந்துள்ளது. இதனால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு இடங்களில் முகாம்கள் சிகிச்சை அளிக்கப்பட்டனர். இதில் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கட்டிடங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கான முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிப்புகள் குறைந்ததை அடுத்து முகாம்கள் மூடப்பட்டன.
எனினும் அப்போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் உபகரணங்கள் அகற்றப்படாமல் அங்குள்ள தரைத்தளம் மற்றும் மேல் தள கட்டிடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கல்லூரி தரப்பில் பலமுறை நினைவூட்டியும் இவை அகற்றப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கட்டிடத்திற்குள் குவிந்து கிடக்கும் இந்த பொருட்களால் கட்டிடமும் கட்டிடங்களில் உள்ள கதவு ஜன்னல்களும் பராமரிப்பின்றி சேதம் அடைந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட துறையினர் இந்த பொருட்களை அங்கிருந்து அகற்றி கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டுக்கு விரைவில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.