கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா கிராமத்தில் இருந்து காலை 6.40 மணிக்கு கோத்தகிரி நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை ஓட்டுநர் பிரதாப் (45) ஓட்டி வந்தார். கண்டக்டராக மணிகண்டன் பணியில் இருந்தார். 6 பயணிகள் பஸ்சில் இருந்தனர். காலை 7.15 மணி அளவில் கோவில்மட்டம் பகுதியில் வந்த போது சாலையோரம் இருந்த உயரழுத்த மின்கம்பி அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது.
அப்போது, அதிக மேகமூட்டமாக இருந்ததால் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி டிரைவருக்கு தெரியவில்லை. எதிர்பாராதவிதமாக மின்கம்பி மீது பஸ் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. உடனே சுதாரித்து கொண்ட டிரைவர் பிரதாப், பஸ்சை சாலையில் நிறுத்தி விட்டு பஸ்சில் இருந்த பயணிகள் 6 பேரை இறக்கி விட்டுள்ளார். கண்டக்டரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து, பஸ் டிரைவர் பிரதாப் தான் வழக்கம்போல் இறங்கும் வழியில் இறங்கிய போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து சோலூர் மட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பஸ் ஓட்டுநர் பிரதாப்பை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.