சேலம்: சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், கடந்த தீபாவளி நேரத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, யூடியூப் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில், இந்து கலாச்சாரத்தை அழிப்பதற்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிக்க கூடாது என கிறிஸ்தவ மிஷனரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் பணத்தை பெற்று கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளன என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நான் விசாரித்தபோது, டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டவர் அர்ஜூன் கோபால் என தெரியவந்தது.
அவரது பின்புலம் பற்றி விசாரித்தபோது அவர் இந்து சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அண்ணாமலை வேண்டும் என்றே இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும்; அவர்கள் சண்டை போட்டு கொள்ள வேண்டும் என்பதன் நோக்கத்திற்காக ஒரு பொய்யான தகவலை பரப்பி விட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153, 505 மற்றும் 120 ஏ, சிஆர்பிசி பிரிவு 156(3), 200ன்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். ஆனால் காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளவில்லை. இதையடுத்து அவர் சேலம் ஜேஎம்4ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம். அதே நேரத்தில் அரசின் அனுமதியை வாங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, சேலம் கலெக்டர் கார்மேகத்திற்கு அந்த புகார் மனுவை அவர் அனுப்பினார். கலெக்டர் கார்மேகம், இந்த மனுவை அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசு வழக்கறிஞர்கள் ஆய்வு செய்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கான காரணங்கள் இருக்கிறது. எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என கூறி கடந்த 18ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வழக்கு வருகிற 4ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து பாஜ தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கும் என தெரிகிறது.