புவனேஷ்வர்: இந்தியாவில் தற்போது கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கென்யாவின் நைரோபியில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் கூட்டத்தில் ஒடிசாவை சேர்ந்த ரஞ்சிதா பிரியதர்ஷினி என்ற பெண் பங்கேற்றார். அப்போது உலகெங்கும் உள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் அனுபவிக்கும் உடல்வலியை பற்றி எடுத்துரைந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து அவர் பெண்களுக்கு மாதவிடாய் தினங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடந்த சுதந்திரதின நிகழ்ச்சியில் ஒடிசா துணைமுதல்வர் பிரவதி பரிதா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் தினங்களில் ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு உடனே நடைமுறைக்கு வருவதாக தெரிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் முதல் அல்லது இரண்டாவது நாளில் அவர்களின் விருப்பத்துக்கேற்ப விடுமுறை எடுத்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.