சென்னை: தமிழக அரசின் பள்ளி கல்வி துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 7ம் தேதி செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்தியில், தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி என்பவர், தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் கடந்த 9ம் தேதி விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தொடக்க கல்வி அலகில் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் பெற்ற 6,053 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கோரப்பட்டது.
ஆனால், பள்ளிகளில் வேறு நபர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை எதுவும் பெறப்படவில்லை. மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து எவ்வித அறிக்கையும் பெறப்படாத நிலையில், சமூக ஊடகங்களில் வரப்பெற்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியாகும். அந்த செய்தியில் குறிப்பிட்டவாறு 10,000 போலி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.