சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (19.06.2025) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளிவிழா கூட்டரங்கில், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி விழா பேரூரையாற்றினார்கள்.
பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பட்டமளிப்பு விழா
தமிழ்நாட்டில் அரசு மருத்தவக்கல்லூரிகள் 36 இருக்கின்றது, ESI மருத்துவக்கல்லூரி ஒன்றும், சுயநிதி கல்லூரிகள் 22, நிகர்நிலை பல்கலைக்கழகம் 12, தனியார் பல்கலைக்கழகங்கள் 4 ஆக மொத்தம் 75 மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றது. மருத்துவக்கல்லூரிகளில் ஏறத்தாழ 11,850 மருத்துவம் படித்த மாணவர்கள் வெளியில் வருகிறார்கள். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை 5050 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை மருத்துவம் படித்து வெளியில் வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, வருகின்ற இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு விழாவில் கலந்து கொண்டு அவர்களுக்கான சான்றிதழ்களையும், அவர்கள் பெற்ற பரிசுகளை வழங்குவதை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கிறோம். இன்று அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் படிக்கும் 144 இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த நிகழ்ச்சி இன்று மிகச் சிறப்பாக முடிவுற்றிருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சியில் நாளை செங்கல்பட்டிலும், வரும் 25.06.2025 அன்று ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரியிலும், 26.06.2025 அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியிலும் தொடர்ச்சியாக நடத்தப்படவிருக்கிறது.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தொடர்பான கேள்விக்கு
மதுரை அரசு இராஜாஜி மருத்துவனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. கிராமப்புற சுகாதார செவிலியர்கள் மட்டும் தான் 2240 பேர் வரை தற்போது நிரப்ப வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன் அந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மருத்துவர் பணியிடங்கள் 100% நிரப்பப்பட்டு விட்டது. பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் நிரப்பப்பட்டு விட்டது. முதுநிலை மருத்துவர்களை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 300க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. மருத்துவக்கல்வி இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மருத்துவ பணியிடங்கள் எதுவும் காலியாக இல்லை. தற்போது பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் 6 இடங்களில் பெரிய அளவிலான மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை, மதுரை, கீழ்ப்பாக்கம், ஆவடி, திருப்பூர் – வேலம்பாளையம், சேலம் – அம்மாபேட்டை, இதில் கோவை மற்றும் மதுரையில் உள்ள JICA கட்டிடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்துவிட்டார்கள்.
மேலும் கீழ்ப்பாக்கம், ஆவடி, அம்மாபேட்டை போன்ற கட்டமைப்புகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பூர் வேலம்பாளையம் கட்டமைப்பு பணிகள் தற்போது முழுமை அடையும் தருவாயில் உள்ளது. இவை அனைத்தும் JICA நிதி ஆதாரத்தோடு கட்டப்பட்டவை. இந்த கட்டிடங்களுக்கு காவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பணியிடங்கள் தேவை. தற்போது 250 பணியிடங்கள் புதிதாக நியமிக்கப்படுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான கோப்புகள் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நிதித்துறையில் ஏற்கெனவே பயன்பாட்டில் இல்லாத பணியிடங்கள் ஒப்படைப்பு (surrender) செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கான பட்டியலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக விரைவில் 250 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பணிநீட்டிப்பு தொடர்பான கேள்விக்கு
எந்த ஒரு அரசு மருத்துவமனைகளிலும் அலுவலர்களுக்கு பணி நீட்டிப்பு என்பது கிடையாது. கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கலாம். இந்த இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு பணிநீட்டிப்பு என்பது கிடையாது. கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை என்பது 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் மருத்துவர்கள் அனுபவம் தேவை என்பதை கருத்தில் கொண்டும், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் இணைந்து கேட்டதற்கு இணங்க, தற்போதைய இயக்குநர் அவர்களுக்கு ஒரு வருடம் பணிநீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி யாருக்கும் பணிநீட்டிப்பு என்பது கிடையாது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.நாராயணசாமி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.லியோ டேவிட், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மரு.பார்த்தசாரதி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.செந்தில்குமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாஸ்கர், இராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஆயிஷா ஷாஹீன், நிலைய மருத்துவ அலுவலர் மரு.வாணி மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.