சென்னை: அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்ம நபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் 5ம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. இதுவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மருத்துவமனையின் நுழைவாயிலில் காவல் துறையினர் இருந்திருந்தால், கத்தியை எடுத்துச் சென்ற நபர் தடுக்கப்பட்டிருப்பார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடுத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்: மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அரசு மருத்துவரைத் தாக்கியவர்கள் அனைவரையும் தமிழக அரசு கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ (தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்): மருத்துவர் பாலாஜி தாக்குதல் சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு சிகிச்சை அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத விரக்தியில் அந்த இளைஞன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வருகிறது. அதன் உண்மை நிலை அறிந்து, பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய்க்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களை காப்பாற்ற வேண்டியதும் அரசின் கடமையாகும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: அரசு மருத்துவர்கள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மருத்துவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ஆயுதத்துடன் வந்தவரை பரிசோதனை செய்யாமல் மருத்துவமனை உள்ளே அனுமதித்தது எப்படி? இந்திய மருத்துவ கவுன்சில் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விதித்துள்ள விதிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. திட்டமிட்ட கொலைத்தாக்குதல்தான் நடந்துள்ளது.