வாணியம்பாடி: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு திரும்பியபோது வாணியம்பாடியில் அதிகாலை அரசு பஸ் தாறுமாறாக ஓடி தனியார் ஆம்னி பஸ் மீது மோதியதில் சென்னை பெண் உட்பட 6 பேர் பலியாகினர். மேலும் 63 பேர் படுகாயமடைந்தனர். இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கடந்த 2 நாட்களாகவே பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் புறப்பட்டது.
இந்த பஸ்சை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஏழுமலை(47) ஓட்டினார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தாறுமாறாக ஓடியது. சென்டர் மீடியனை தாண்டிய அரசு பஸ், எதிர்திசையில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பஸ்களின் முன்பக்கமும் சுக்குநூறாக நொறுங்கியது.
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் ஏழுமலை, அரசு பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த கிருத்திகா(35) என்ற பெண் பயணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த 67 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வாணியம்பாடி தாலுகா போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பணியாளர்கள் வந்து, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி ஆல்பர்ட் ஜான் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார். தொடர்ந்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 27 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வாணியம்பாடி புதூரை சேர்ந்த தனியார் பஸ் கிளீனர் முகமது பைரோஸ்(45), ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த அஜித்(25) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஆம்பூர் அரசு பொது மருத்துவமனையில், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ் டிரைவர் சையது நதிம்(47) உயிரிழந்தார்.
மேலும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜு(50) என்பவரும் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. தகவல் அறிந்த திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருந்த 6 பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
* மீட்பு பணியில் ஈடுபட்ட ஏட்டு திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் முரளி(45). இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தவர், பஸ்கள் மோதிய விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டார். பயணிகளின் உடைமைகளை சரக்கு வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் வந்த அவர் லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறி அங்கேயே படுத்து ஓய்வெடுத்தார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் செல்போனை எடுக்காததால், சக போலீசார், எழுப்ப முயன்றனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருந்ததால் அதிர்ச்சியடைந்து உடனடியாக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏட்டு முரளி ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 12 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, ஏட்டு முரளியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
* விளையாட்டு போட்டியில் பங்கேற்று திரும்பிய மகன் கண் முன் தாய் பலி
பஸ் விபத்தில் உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த கிருத்திகாவின் 12 வயது மகன் ஹரி, கூடைப்பந்து விளையாட்டு வீரர். நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் ஹரி பங்கேற்றார். இதற்காக கிருத்திகா மகன் ஹரி, 6 வயது மகளுடன் பெங்களூரு சென்றிருந்தார். அங்கிருந்து மீண்டும் பஸ்சில் ஊர் திரும்பியபோதுதான் விபத்தில் கிருத்திகா உயிரிழந்தார். மேலும் மகன், மகளுக்கு கால் முறிந்துள்ளது. தாய் இறந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.