சென்னை: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன், கடந்த 24ம் ேததி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த 9 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத் (42), நீட் விலக்கு மசோதா மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் மசோதாவில் ஆளுநர் கையெழுத்து போடாததை கண்டித்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார்.
அப்போது ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த கிண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கருக்கா வினோத்தை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தியதில், ரவுடி கருக்கா வினோத் தனியாக வந்து பெட்ரோல் குண்டுகள் வீசியது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இருந்தாலும், ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி போலீசார் கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இருதரப்பு வாதங்களை தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசிய ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைதொடர்ந்து கிண்டி போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவாக முழக்கம்
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது ரவுடி கருக்கா வினோத், ‘நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட வேண்டும்’ என்று முழக்கம் எழுப்பினார். இதனால் சிறிது நேரம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.