சென்னை: சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலைஞரின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ‘செம்மொழி நாள்’ விழாவாக கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு திமுக-வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.
இதையடுத்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில், ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்ததுதான். நீதிமன்றத்துக்கு சென்றுவிடுவோம் என்ற அச்சத்தில் ஆளுநர், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என முதல்வர் கூறினார். முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.