சென்னை: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ் .எஸ். ஆர். ராமச்சந்திரன் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். நீர்நிலைகள், ஆறுகள், ஓடைகள் போன்றவை இயற்கை நிகழ்வுகளால் தனது பரப்பை விரிவாக்கிக் கொண்டே செல்வதால், அவைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தண்ணீர் அதன் போக்கை மாற்றிக்கொண்டால் நிலப்பரிமாற்றம் முறையை சட்டபூர்வமாக ஒழுங்குபடுத்துவதற்கும், 100 ஏக்கருக்கு குறையாத இடத்தில், நீர்நிலைகள் இருந்தால் அந்த இடத்தில் வணிகம், தொழில்துறை சார்ந்த இடத்தை ஒருவர் செயல்படுத்த விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என்றும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாநிலத்தில் உற்பத்தி, பொருளாதார மேம்பாட்டுக்கான முக்கிய காரணியாக நிலம் உள்ளது. அரசு நிலங்களை ஒருங்கிணைத்தல், குத்தகை போன்றவற்றில் தற்போதுள்ள நடைமுறை இரு நூற்றாண்டுகளாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மாநிலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டங்களுக்காக அரசு நிலங்களை ஒருங்கிணைப்பதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.