பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதால் சமூக ஆர்வலர் டி. ஜெ. ஆப்ரகாம், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். பின்னர் சித்தராமையா மீது வழக்கு பதிய அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தன்மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யகோரி சித்தராமையா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சித்தராமையாவுக்கு ஆதரவாக மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதம் செய்தார். ஆளுநர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, உயர்நீதிமன்றம் நடத்தும் விசாரணையில் சிறப்பு நீதிமன்றம் தலையிட முடியுமா? உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு விசாரணையில் இருக்கும்போது, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், ஆளுநர் அனுமதி தொடர்பாக உத்தரவிட்டால், அது உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை பாதிக்காதா? ஆகவே உயர்நீதிமன்றத்தில் விசாரணை முடியும் வரை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறக்காமல் இருக்க இடைக்கால தடை விதிக்கிறேன். அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.