சென்னை: சிந்தூர் ஆபரேஷனின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆயுதப் படைகளின் பணியாளர்களைப் போற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி கரன்பீர்சிங் பிரார், மற்றும் தென்னிந்திய முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டு சிறப்பாகவும், துல்லியமாகவும் நடத்தப்பட்டு இலக்கை எட்டியது சிந்தூர். இதனை சாத்தியமாக்கிய ராணுவத்திற்கு நன்றி கூறவே நாம் இங்கு கூடி இருக்கின்றோம். பாகிஸ்தான் இந்த போரை முடிப்பதற்கான சூழ்நிலைகளை நாம் உருவாக்கினோம். 10ம் தேதி காலை அரை மணி நேரத்தில் அவர்களுடைய விமானப்படைத்தளங்கள் அனைத்தும் முற்றிலும் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
அதுவே நம் பலத்தை உலகுக்கு காட்டியது. ஒவ்வொரு முறையும் நாம் அவர்களை தண்டிக்கவில்லை. ஆனாலும் பாகிஸ்தான் அதனை மேற்கொண்டு பெரிதுபடுத்திக் கொண்டிருந்தது. அதற்காகவே நாம் அவர்களுக்கு பாடம் கற்பித்தோம்.இந்த ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். குறைந்த நாட்களில் தன்னுடைய இலக்கை எட்டிய போர் இதுவாகும். ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர், இஸ்ரேல்-ஹமாஸ், இஸ்ரேல்-ஈரான் என போர்கள் பல நாட்களாக, மாதங்களாக வருடங்களாக நடக்கிறது. அதில் ஒரு தரப்பினரும் தங்கள் இலக்கை அடையவில்லை. பாதுகாப்பு குறித்து படிப்பவர்களும், ஆராய்பவர்களும் ஆபரேஷன் சித்தூர் குறித்து இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி செய்வார்கள். இந்தியாவை ஆபரேஷன் சிந்துருக்கு முந்தைய பிந்தைய என பார்க்கும் வகையில் மாற்றியது இந்த ஆபரேஷன். இவ்வாறு அவர் பேசினார்.