சென்னை: கவர்னர் மாளிகையில் ‘‘எண்ணித் துணிக’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேலும், கவர்னர் ஆர்.என்.ரவி இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், அவர்களுக்கு சால்வை அணிவித்து, பிரதமர் மோடி எழுதிய ‘தி எக்ஸாம் வாரியர்’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது 3வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 2047ம் ஆண்டில் உலகின் முதல் நாடாக இந்தியா இருக்கும். அதனை இன்றைய சாதனையாளர்களாகிய நீங்கள் தான் சாத்தியப்படுத்தப்போகிறீர்கள். உங்களுக்கு கடினமான சூழல் வரும்போது அதனை புன்சிரிப்புடன் கடந்து செல்ல பழகிக் கொள்ளுங்கள்.
கடினமான சூழல்களை எதிர்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் காண்கிற கனவை நினைவாக்க கடினமாக உழைக்கவும் வேண்டும். அதில் கவனம் சிதறல் இருக்கவே கூடாது. உலகில் இருக்கும் சாதுக்கள், சன்னியாசிகள் தவிர, படிப்பிலோ அல்லது விளையாட்டின் மூலமாகவோ புகழை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். படிப்பை விட விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டின் மூலமாக உரிய புகழை அடைய முடியும். ஆனால் அதில் உங்களின் கவனம் அதிகமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். தற்போதைய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு மனிதர்களை ஆள முடியாது. அது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அணு ஆயுதத்தை போல் செயற்கை நுண்ணறிவும் ஆபத்தானது, கட்டுப்படுத்த வேண்டியது தான், இருப்பினும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் ஆபத்துகளை மனிதர்களால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.