சென்னை: ஆளுநருக்கு அரசு அனுப்பிய கடிதங்களை பெற்றதற்கான ஒப்புகைச்சீட்டு வெளியானது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பற்றி தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர அனுமதி கோரி மே 15, செப்டம்பர் 12-ல் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன. இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக எந்த கடிதமும் மாநில அரசிடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை என்று ஆளுநர் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கடிதத்தை ஆளுநர் மாளிகை பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு வெளியானது. ஆளுநர் மாளிகை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு ஒப்புகை சீட்டு வழங்கியதற்கான விவரம் வெளியிடப்பட்டது. 2022 செப்டம்பர் 12ம் தேதி ஆளுநரின் முதன்மை செயலாளருக்கு எழுதிய கடிதம் பெறப்பட்டதாக ஒப்புகைச் சீட்டு வெளியிடப்பட்டது. இதேபோல் மே 15ம் தேதியன்று ஆளுநரின் முதன்மை செயலாளருக்கு எழுதிய கடிதத்துக்கான ஒப்புகை சீட்டும் வெளியாகி உள்ளது. கடிதங்கள் கிடைக்கப் பெறவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்த நிலையில், 2 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.