மதுரை: மதுரையில் தனியார் அமைப்பு சார்பில் இளம் தொழில் முனைவோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் துவக்கமாக ஏற்பாட்டாளர்கள் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்படும் என்றனர். தனியார் கல்லூரி மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்தை, ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தை..’ என பாட தொடங்கினர். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘தேசிய கீதம்... தேசிய கீதம்...’ என சத்தம் எழுப்பினர்.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்தை முதல் வரியுடன் அப்படியே நிறுத்திவிட்டு தேசிய கீதத்தை மாணவிகள் முழுமையாக பாடினர். இதன்பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஆரம்பித்து, உடனடியாக முதல் வரியுடன் நிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் செயல் என அங்கிருந்தவர்கள் கடுமையான அதிருப்தி தெரிவித்தனர். ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது. மதுரையில் நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாட துவங்கி, பாதியில் நிறுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.


