சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவசரமாக இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி நிறைவடைந்தது. ஆளுநர் ரவி பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுநராக இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை திடீர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
ஆளுநர் ஏற்கனவே ஆக.1ம் தேதி டெல்லி சென்று திரும்பிய நிலையில், 2வது முறையாக பயணம் மேற்கொள்கிறார். ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.