மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் 2 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இது, அவரது தனிப்பட்ட பயணம் எனக் கூறப்படுகிறது. சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் விஸ்தாரா பயணிகள் விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக புதுடெல்லிக்கு அவசரமாகப் புறப்பட்டு சென்றார். அவருடன் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி சென்றனர். புதுடெல்லி பயணத்தை முடித்து நாளை இரவு விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார்.
முன்னதாக அவர் கடந்த செவ்வாயன்று சொந்த பயணமாக பெங்களூர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து ஐதராபாத் சென்று, நேற்று மாலை சென்னை திரும்பிய நிலையில், இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் அவசர பயணமாக புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அவரது திடீர் புதுடெல்லி பயணம் குறித்து கவர்னர் மாளிகை தரப்பில் இருந்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. எனினும் இது, அவரது சொந்த பயணம் என்று வழக்கம்போல் காரணம் கூறுகின்றனர்.ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை மாற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
மேலும், பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர் நியமனம், நீட் தேர்வு விலக்கு மசோதா, சனாதனத்துக்கு ஆதரவாக ஆளுநரின் செயல்பாடு, நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது உள்பட பல்வேறு பிரச்னைகளில் ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக, தற்போதைய புதுடெல்லி பயணத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது.