சென்னை : கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் என்ற தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பொது மக்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அவற்றை வலுக்கட்டாயமாக வசூல் செய்து, அதன் மூலம் கடன் பெற்றவர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தற்கொலை செய்து கொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத் தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்து, அதன் மூலம் கடன் பெற்றவர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ தற்கொலை செய்து கொண்டால், அதற்கு காரணம் ஆனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், கடுமையான விதிகளையும் அறிவித்தார். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல், கடன் வழங்கினால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இந்த மசோதா உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.