சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசிய, ரவுடி கருக்கா வினோத்தை நவ.9ம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கவர்னருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழர்கள், தமிழக கலாசாரம், மொழி, இலக்கியம், வழிபாடு உள்ளிட்ட பிரச்னைகளை கவர்னர் ஆர்.என்.ரவி கிளப்பி வருகிறார்.மேலும், தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் அவர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தமிழக கவர்னருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் கவர்னர் மாளிகை முன்பு பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதனால், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு கவர்னர் மாளிகை எதிரே சாலையின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென கவர்னருக்கு எதிராக கோஷமிட்டபடி 2 பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். இதைப் பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கையில் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அந்தக் குண்டுகள் சாலையின் நடுவில் உள்ள பேரிகார்டுகளில் பட்டு உடைந்து கீழே விழுந்தது. பின்னர். மேலும் 2 குண்டுகளை எடுத்து கவர்னர் மாளிகை நோக்கி வீச முயன்றார். இதனால் உஷாரான போலீசார், வெடிகுண்டு வீச முயன்றவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த இரு பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கேயே அழிக்கப்பட்டன.
பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நந்தனத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்று தெரிந்தது. பிரபல சி வகை ரவுடியான வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே ரவுடி கருக்கா வினோத் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் நள்ளிரவில் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.