சென்னை: அரசுக்கு எதிராக நிர்வாக யுத்தத்தை நடத்தும் ஆளுநர் மாளிகையின் அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து பல்வேறு கருத்து மோதல்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆளும் அரசுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதேபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருகிறார். குறிப்பாக சில மசோதாக்களை அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் மக்கள் நலம் சார்ந்த அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாத சூழல் இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுமார் 13 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக ஆளுநர் மாளிகையிலேயே கிடப்பில் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் நீடித்து வருகிறது. இதனிடையே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் அரசின் நடவடிக்கைக்கு மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்; அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காத ஆளுனருக்கு எதிராக, தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, நிர்வாக யுத்தத்தை நடத்தும் ஆளுநர் மாளிகையின் அரசியல் முடிவுக்கு வரவேண்டும். கூட்டாட்சி தத்துவம் மதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.