சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் செயல்பாடுகளை முடக்குகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக நலன்களுக்கு விரோதமாக நீட் உள்ளிட்ட 12 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக எதேச்சதிகார முறையில் செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு 12 கேள்விகளை எழுப்பி, அதற்கு உரிய பதிலை விரைவில் வழங்க வேண்டுமென்று ஆணையிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் அரவணைப்பில் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு விரோதமாக, உரிமைகளை பறிக்கின்ற வகையில் செயல்படுகின்ற ஆளுநரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலமாக தமிழக உரிமைகளுக்காக போராடி வருகிற தமிழக முதல்வர், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். மாநில உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதை முதல்வர் தனது நடவடிக்கையின் மூலம் நாள்தோறும் உறுதி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.