சென்னை: பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பதை வரவேற்கிறோம் என்றும் விழாவில் பங்கேற்கும் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட கவர்னர் ஆர்.என்.ரவி அடாவடியாக மறுத்துள்ளார். தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் கவர்னர், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்வது அவமானகரமான ஒன்றாகும். எனவே அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடியேந்தி கண்டனம் முழங்குவார்கள்’’ என கூறியுள்ளார்.