Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும் தமிழ்நாடு : ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர்!!

சென்னை : 3வது ஆண்டாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அவை பின்வருமாறு..

*தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி, இதுவரை இல்லாத அளவிற்கு எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2.23 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் தலா 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

*புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; இடைநிற்றல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டிலேயே உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

*மகளிர் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அளப்பரிய பல சாதனைகளை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1.30 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தொழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பயனாக, இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் எண்ணிக்கை 40.3% ஆக உயர்ந்துள்ளது.

*முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம், திராவிட மாடல் ஆட்சியில் ஆல்போல் தழைத்து, இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4.9 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

*குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

*தமிழ்நாடு முழுவதும் ரூ.900 கோடி செலவில் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 36 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

*ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை, தனிப்பட்ட குழாய் இணைப்புகள் மூலம் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நிதியிலிருந்து மட்டும் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதில்லை.

*திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* பழங்குடியின மக்களுக்காக ரூ.315 கோடி செலவில் 7,255 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

* சிறப்பு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

* அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

* ‘காலனி’ என்ற சொல் நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

*காலை உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டத்தால் 19 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2172 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

*சென்னை செம்மஞ்சேரியில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

*கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

*என்றுமே இருமொழிப் பாடத்திட்டமே தமிழ்நாட்டின் கொள்கை என்பதை, திராவிட மாடல் அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உறுதியாக எடுத்துரைக்கிறது.

*மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 3,631 மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.