ராமநாதபுரம்: ‘வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ, உடனடியாக என் பணியை முடித்துக் கொண்டு விலகி விடுவேன்’ என மாணவர்களிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை வந்தார். அவரை ராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன் பின்னர் கார் மூலம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வந்தார். கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ஆளுநர், மாணவர்களுடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடினர். அப்போது ஒரு மாணவர், ‘‘முன்னால் நீங்கள் காவல்துறை உளவுப்பிரிவில் இருந்தீர்கள். இப்போது கவர்னர் பதவியில் இருக்கிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள். எது உங்களுக்கு மனநிறைவை தருகிறது’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆளுநர், ‘‘நான் வகிக்கும் பதவி எப்போது எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறதோ, அப்போதே என் பணியிலிருந்து விலகி விடுவேன்’’ என்றார்.
- அப்துல் கலாம் பெயரை மாற்றி சொன்ன ஆளுநர்
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்த ஆளுநர், ‘முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்’ என்பதற்கு பதிலாக அப்துல் கலாம் ஆசாத் என கூறினார். பின்னர் அங்கு இருந்தோர் திருத்தி கூறியதையடுத்து, டாக்டர் அப்துல் கலாம் என ஆளுநர் குறிப்பிட்டு அவர், ‘உழைப்பால் உயர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஆனது போல் மாணவர்களும் உழைத்து கொண்டே இருக்க வேண்டும்’ என்றார். - கருப்புக்கொடி காட்டிய 50 பேர் கைது
ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க நிர்வாகிகள் கையில் கருப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.