சென்னை: சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதற்காக ராஜ்பவனிற்கு வருகைதந்துள்ளார். அடையாறு துணை ஆணையர் பொன்கார்திக்-க்கும் உடன் வந்துள்ளார். நேற்று மாலை ஆளுநர் மாளிகை வாயிலில் நடைபெற்ற பெட்ரோ குண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கருக்கா வினோத் என்பவரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றவில்லை என்பதற்காக பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக கருக்கா வினோத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. ஐபிசி பிரிவு 124-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது.
இதனை அடுத்து சென்னை மநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநரை சந்தித்து வருகிறார். நேற்று நடைபெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வருவதால் அதற்காக எடுக்கபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க தகவல் வெளியாகியுள்ளது.