சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக் காலம், கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவி காலத்தை நீட்டித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையில் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படவும் இல்லை. இதனால் ஆர்.என்.ரவி தொடர்ந்து, பதவியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி காலை ஆர்.என்.ரவி, அவசர, அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். பதவி நீட்டிப்பு உத்தரவுடன் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசிடமிருந்து பதவி நீட்டிப்பு உத்தரவு எதுவும் வராமல், ஆர்.என்.ரவி கடந்த 4ம் தேதி மாலை டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் அவசரப் பயணமாக நேற்று மாலை 5.10 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஆளுநருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். ஆளுநர் ரவி மீண்டும் வரும் 21ம் தேதி (நாளை) மாலை, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பி வருகிறார். டெல்லியில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து, தனது பதவி நீட்டிப்பு குறித்தும் பேச இருப்பதாக கூறப்படுகிறது.