சென்னை: சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் அவர்கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்கள் பணி என்பது இந்த ஆட்சியினுடைய ஒரு மைல்கல்லாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்றோடு சேர்த்து ஆயிரம் ஆண்டுகள் மேற்பட்ட 59 கோயில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. இத்திருப்பணிக்கு அரசின் சார்பில் மட்டும் ரூ.425 கோடி மானியமாக வழங்கப்பட்டு இருக்கிறது. துறையின் சார்பில் பொதுநலநிதி ரூ.60 கோடி, நன்கொடையாளர்கள் ரூ.120 கோடி வழங்கியுள்ளனர். சுமார் ரூ.600 கோடி அளவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான கோயில்கள் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைக்கு கூட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ராணிப்பேட்டை மாவட்டத்தில் வளவ நாதஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் நடைபெற உள்ள முருகன் மாநாடு அரசியல் கட்சி சார்ந்த ஒரு மாநாடு. இந்து சமய அறநிலையத்துறை நடத்திய மாநாடு தான் பக்தி மார்க்கமான மாநாடாகும்.
சர்வதேச தரத்திற்கு இணையாக, விமான நிலையங்களுக்கு இணையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடர் விடுமுறையின் காரணமாக இரவு நேரத்தில் பயணிகள் அதிகமாக கூடியதால் இரவு நேர பயணிகளுக்கு போதுமான பேருந்து இல்லாத நிலையில் அவர்கள் ஒரு தர்ணாவிலே ஈடுபட்ட சூழ்நிலை. அதையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் தேவையான பேருந்துகளை ஏற்பாடு செய்து அந்தப் பயணிகளின் திட்டமிட்ட பயணத்தையும் நிறைவேற்றி இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவகுமார், மாநகராட்சி உறுப்பினர் ராஜேஸ்வரி தர், பாபு, செயல் அலுவலர் நித்தியகலா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.