விருதுநகர்: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஆந்திரா மாநில ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம், ஆந்திரா ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், சிவகங்கை கீழடி அருங்காட்சியகம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெம் அறிவியல் பூங்கா, பந்தல்குடியில் உள்ள சூற்றுசூழலியல், கொடைக்கானல் சேக்ரட் ஹாட் இயற்கை அறிவியல் அருங்காட்சியகம், கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொடர்ச்சியாக கல்விச்சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஆக.22, 23 ஆகிய இரு தினங்கள் 40 அரசு பள்ளி மாணவர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தை பார்வையிட்டு திரும்பி உள்ளனர். இது குறித்து மாணவ, மாணவியர் கூறுகையில், விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்திய விண்வெளி பயணம் குறித்து விளக்கினர். மேலும் இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். இஸ்ரோவில் பணிபுரிய தேவையான தகுதிகள் குறித்து விளக்கம் அளித்ததாக தெரிவித்தனர். எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான தூண்டுகோலாக இந்த பயணம் அமைந்தாக மாணவர்கள் தெரிவித்தனர்.