திருமங்கலம்: திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களைவழங்கினார்.
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் கலந்து கொண்டு 79 மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கி அவர் பேசும்போது, ‘‘அரசு பள்ளியில் படிக்கும் நீங்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களுக்கு உதவும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போராடி வருகிறார்.இந்த மேல்நிலைப்பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் தேவை என பள்ளி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் எடுத்துரைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், நகராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின்திரவியம், பெல்ட்முருகன், ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், ஜெய்லானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.