சென்னை:தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு, அந்த மாணவனின் வகுப்பறை கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் புற கல்விச் செயல்பாடுகளில் மாணவனின் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகின்றன.
கல்வியாண்டு முழுவதும் பள்ளியில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பினை, ஆண்டு இறுதியில் மாணவர்கள் அவர்கள் தம் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த நல்வாய்ப்பாக அமைவது பள்ளி ஆண்டு விழாவாகும். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடைபெற வேண்டும்.
மாணவர்களின் தனித்திறன்களை அவர் தம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக வெளிப்படுத்த ஏதுவாக அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழாவினை கொண்டாடிடப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 576 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு விழாவிற்கான செலவினங்கள் கணக்கிடப்பட்டு ரூ.14 கோடியே 39 லட்சத்து 97ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.