அரியலூர்: அரியலூர் மாவட்டம், தேளூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் பூட்டியிருந்த உயர் தொழில் நுட்ப கணினி அறையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ள வகுப்பறையில் இருந்த 23 மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் சிவசங்கர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மருத்துவர்களிடமும் மாணவ, மாணவிகளின் உடல்நிலை குறித்தும், சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். தற்போது மாணவ, மாணவிகள் அனைவரும் நலமாக உள்ளதால் அனைவரும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சிவசங்கர் இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க கவனமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.