மதுரை: அரசின் கொள்கை முடிவு என்பதால் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தமிழக காவிரி விவசாயி சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் – 2023 (சட்டம் எண் 23/23) ஐ தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. விவசாய நில உரிமையாளர்கள், ஏழை விவசாய குத்தகைதாரர்கள் உள்ளிட்ட நில உரிமையாளர்களிடமிருந்து, முன் ஒப்புதல் பெறாமல் தொழிற்சாலை உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களுக்காக நிலத்தை ஒருங்கிணைக்க இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இந்தச் சட்டம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளது. காவிரி டெல்டா உள்ளிட்ட விவசாயிகளின் உரிமைகள், வாழ்வாதார உரிமை மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சட்டமாக உள்ளது. எனவே, தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம், 2023ஐ ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், ‘‘இந்த சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எவ்வாறு கூறுகிறீர்கள்? இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடையது. எந்த அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என குறிப்பிடாமல், நிவாரணத்தை வழங்க இயலாது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எளிதாக ரத்து செய்ய முடியாது. பாதிப்பு ஏற்பட்டால், அரசிடம் மனு அளிக்கலாம்’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.