சென்னை: நவ.18ல் தமிழக அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு விரும்புவதால் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும். குடியரசுத் தலைவர் பற்றியோ, ஆளுநர் பற்றியோ பேசுவதற்காக பேரவை கூடவில்லை என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார்.
அரசின் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். ஒப்புதலுக்காக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
தமிழக அரசு மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மசோதாக்களை நிறைவேற்றும் வகையில் விரைவில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக் கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் நவ.18ல் தமிழக அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை 2023ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 18ஆம் நாள் சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயயகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவத் தலைவர் கூட்டியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.