சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் எனக் கூறி 26 பேராசிரியர்களின் பதவி உயர்வு பட்டியலை தயாரித்த தமிழக அரசு இது சம்பந்தமாக ஆட்சேபனைகளை கோரியது. ஆட்சேபனைகள் தெரிவிக்கும் முன்பே 14 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி முதல்வர்களாக நியமித்து 2024 அக்டோபர் 3ம் தேதி அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பேராசிரியர் மனோன்மணி உள்பட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, 14 அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். பணி மூப்பு அடிப்படையில் மனுதாரர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து 4 வாரங்களில் மருத்துவ கல்லூரி முதல்வர்களாக நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன்,கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தனிநீதிபதி 14 டீன் நியமன உத்தரவை ரத்து செய்தது சரியே என்று எதிர் மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆட்சேபனைதெரிவிக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்கிய நிலையில், 2 நாளில் நியமன உத்தரவு பிறப்பித்ததை ஏற்க முடியாது. தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசு 4 வாரங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர் பதவி உயர்வுக்கான பட்டியலை தயாரித்து நியமனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.