சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை கேண்டின்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பஜ்ஜி, போண்டா வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூண்டுக்குள் எலி ஓடும் காட்சிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்த பிறகு கேண்டீனை தற்காலிகமாக மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளில் உள்ள கேண்டின்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்:
* கேண்டின்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும் , கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
* சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமி நாசினிகளை உணவு உள்ள இடத்தில் இருந்து தனியாக வைக்க வேண்டும்.
* பூச்சிகள் மற்றும் விலங்குகள் எளிதில் அணுகாத வகையில் உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள் , சாக்கடை , கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூட வேண்டும்.
* விலங்குகள், பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் உணவு நிலையங்கள் / வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது.
* உணவுப் பொருட்கள் நிலப்பரப்பிற்கு மேலும் சுவர்களில் இருந்து விலகியும் பூச்சி எதிர்ப்பு கொள்கலன்களில் வைத்து சேமிக்கப்பட வேண்டும்.
* பழுதான கட்டிடங்களை உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பூச்சிகள் மற்றும் விலங்குகள் அணுகாத அளவிற்கு கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்.
* அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை மட்டுமே வசூலிப்பதுடன் , காலாவதி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
* உணவுகளை கையாளுபவர்கள் உடல்நிலை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை அவ்வப்போது மேற்கொள்ளவேண்டும். உடல்நிலை சரி இல்லாத நபர் உணவுகளை கையாள கூடாது.
* உணவுகளை கையாளுபவர்கள் கட்டாயம் கையுறை அணிவதுடன் தலைமுடி உதிராமல் இருக்க தலையுறை அணிய வேண்டும்.
* உணவு கையாளுபவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான குடிநீரால் கழுவி, கைகளை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
* உணவு கையாளுபவர்கள் புகைபிடித்தல், எச்சில் துப்புதல், மெல்லுதல், தும்மல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் இடங்கள் உணவகத்தில் இருந்து தனியாகவும் பூச்சி மற்றும் விலங்குகள் நெருங்காத அறைகளில் சேமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.