கடலூர்: கடலூர் அருகே திருவந்திபுரம் சாலக்கரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மண்டபத்தின் உள்ளே கத்தி மற்றும் வீச்சரிவாளுடன் புகுந்த 2 இளைஞர்கள், போதையில் நடனம் ஆடி மிரட்டியதோடு இருக்கைகளை சேதப்படுத்தினர். பின்னர் கத்தியை வீசியபடியே பைக்கில் சென்றனர். அவ்வழியாக வந்த திமுக பிரமுகர் பிரகாஷ் முகத்தில் வெட்டினர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரவுடிகளான சென்னை சூர்யா (26), விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது.
சூர்யாவை பிடிக்க போலீசார் முயன்றபோது தப்பி ஓடியதில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை கைது செய்த போலீசார் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சூர்யா கடந்த 1ம் தேதி இரவு மனைவி பிரீத்தியை வரவழைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பாதுகாப்பு பணியின்போது மெத்தனமாக இருந்த காவலர்கள் சாந்தகுமார், வேல்முருகன், கவியரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவிட்டார்.