சென்னை: அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் இனி 3 ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் இதுவரை 2 ஷிப்டில் பணி அமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தனர். இனி 3 ஷிப்ட் அடிப்படையில் ஊழியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர் உதவியாளர்கள் (தரம் 2) மற்றும் கடைநிலை ஊழியர்களான மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி முதல் ஷிப்ட் காலை 6 மணி முதல் மணி 1 மணி வரையும், 2வது ஷிப்டு மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையும் இருக்கும். 3வது ஷிப்டு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கும். இந்த மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த பணியாளர்களில் பணியில் உள்ள செவிலிய உதவியாளர்(கிரேடு 2) மற்றும் கடை நிலை ஊழியர்களான மருத்துவமனை பணியாளர்களில்(“டி” குரூப்) 50 சதவீத பேர் முதல் ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 2 வது ஷிப்டிலும், 25 சதவீத ஊழியர்கள் 3-வது ஷிப்டிலும் பணி அமர்த்தப்படுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.