திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே பராமரிப்பு பணிக்காக இயக்கி வந்த அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு சென்னை ேகாயம்பேடு பணிமனைக்கு அரசு பஸ் புறப்பட்டது. பராமரிப்பு பணிக்காக இந்த பஸ்சை டிரைவர் தியாகராஜன் ஓட்டி வந்தார். அவருடன் கண்டக்டர் மனோகரன் என்பவர் வந்தார். காலை 9 மணியளவில் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்ததும் டிரைவரும், கண்டக்டரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே டிரைவர் தியாகராஜன், சுதாரித்து கொண்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.
அடுத்தகணமே டிரைவர், கண்டக்டர் அலறியடித்து கீழே இறங்கினர். அப்போது கரும் புகையுடன் இஞ்சினில் இருந்து தீ வேகமாக பரவியது. சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் எரிய துவங்கியது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலைய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் செய்யூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பராமரிப்புக்காக இயக்கி வந்த பஸ் என்பதால் பயணிகள் யாரும் இல்லை. அதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.