சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் இவர்களும் பயனடைய ஏதுவாக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் திருநம்பி உள்ளிட்டோர் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றாக சமர்ப்பித்து, வருமான உச்சவரம்பு ஏதுமின்றி, பிற உதவித் தொகை ஏதேனும் பெற்று வந்தாலும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.